திருச்சிராப்பள்ளியில் மகாத்மா காந்தியடிகள்
தேசத் தந்தை என்று சிறப்பித்து அழைக்கப்படும் “மகாத்மா காந்தி”அவர்கள் நம் நாட்டின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடி நாட்டு மக்கள் இடையே சுதந்திர போராட்ட தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட வேளையில் சுமார் 208 நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும் சுமார் 13 நாட்கள் தமிழகத்தின் மத்தியில் உள்ள (gandhiji visits to trichy) திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வருகை தந்து அங்கு வாழ்ந்த மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினாராம்.
1920 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பகலில் திருச்சிக்கு வந்த காந்தியடிகள், பிற்பகலில் நடைபெற்ற ஊழியர்களின் கூட்டத்திலும், மாலையில் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கு கொண்டார். பின்னர் மாலை ஆறு மணிக்கு மேல் அங்குள்ள சவுக் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்குபெற்று உரையாற்றி சுதந்திர தாகத்தை மக்களுக்கு ஏற்படுத்தினார். அதற்கு பின்னர் ஓராண்டு காலம் கழித்து 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திருச்சிக்கு வருகை தந்த காந்தியடிகள் அங்கு நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் பங்குபெற்று உரையாற்றினார்.
இதன் மூலம் தமிழகத்திலேயே நகர சபை வரவேற்பு அளித்த முதல் கூட்டம் என்ற பெருமை திருச்சிக்கு கிடைத்தது. பின்னர் இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற நகர சபை வரவேற்பு கூட்டத்திலும் பங்குபெற்று உரையாற்றினார். இதன் பின்னர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1927 செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் மாலையில் பொன்மலையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்க விழாவில் பங்கேற்று உரையாற்றினார். இதனை தொடர்ந்து அடுத்து வந்த 18 ஆம் தேதி ராஜன் மருத்துவமனையில் எக்ஸ்-ரே நிலையத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் திருச்சியில் தங்கியிருந்து ஒரு நாள் ஓய்வெடுத்த காந்தியடிகள் அடுத்து வந்த 20 ஆம் தேதி மாணவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ வரவேற்பு கூட்டத்திலும், பிற்பகலில் பெண்கள் நடத்திய கூட்டத்திலும் பங்குபெற்று உரையாற்றினார். அப்போது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நகர சபை உறுப்பினர்கள் திருச்சியில் காந்தியடிகளை சந்தித்து வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அடுத்ததாக அவர் பங்கேற்கவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள விவேகானந்த ஆசிரமத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதோடு தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட காந்தியடிகள், அடுத்ததாக சுமார் 7 ஆண்டுகள் கழித்து திருச்சிக்கு 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வந்தார்.
அப்போது அவர் ஸ்ரீரங்கம், டோல்கேட், மண்ணச்சநல்லூர் மார்க்கமாக சமயபுரம் வரை சென்று மக்களிடையே கலந்துரையாடினார். தொடர்ந்து சிந்தாமணி, வரகனேரி ஆகிய ஊர்களுக்கு சென்று கலந்துரையாடல் நடத்திய காந்தியடிகள் பின்னர் கரூருக்கு புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு வந்த காந்தியடிகள், ரயில் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மதுரையில் தனது பணியை முடித்து மீண்டும் திருச்சிக்கு வந்த காந்தியடிகள் அங்கிருந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதுவே காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த கடைசி நாளாக கருதப்படுகிறது. இதுவே திருச்சிக்கும் காந்தியடிகள் வந்த கடைசி நாளாகும்.
இதுவரை மொத்தம் 13 முறை திருச்சி மாநகருக்கு வருகை தந்து பொது மக்களிடையே கலந்துரையாடிய காந்தியடிகள் வரலாற்றில் திருச்சியுடன் இணைந்து இடம் பிடித்துள்ளார். காந்தியடிகள் சுற்று பயணமாக திருச்சி சந்திப்பு பகுதிக்கு வந்த போது அவர் தங்கியிருந்த கட்டிடங்கள், தற்போது அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் காந்தியடிகள் இங்கு தங்கியிருந்ததை நினைவு கூறும் வகையில் அவர் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய ராட்டைகள், விரிப்புகள், மற்றும் இங்கு அவர் வரும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து காட்சி கூடமாக பராமரிக்கின்றனர். இது தவிர காந்தியடிகள் சந்தையில் நாட்டிய அடிக்கல், சாத்திரம் பேருந்து நிலையம் அருகில் அவர் தங்கியிருந்த இடம் இன்ட்ராக்லவும் நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
பொன்மலையில் உள்ள காந்தியடிகள் சிலை (ponmalai gandhi statue):
இப்படி திருச்சிராப்பள்ளி மாநகருடன் நெருங்கிய தொடர்பு உடைய காந்தியடிகளுக்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கலைக்குழுவினர் இனைந்து நடத்தி வந்த பாரதி நாடக சபா சார்பில் முழு உருவச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிதி திரட்ட திட்டமிட்ட நாடக குழுவினர், பணமாக வசூலிக்காமல் வீடு வீடாக சென்று வெண்கல பாத்திரங்களாக சேகரித்தார்கள். இவ்வாறு இந்த பகுதி முழுவதும் சேகரிக்கப்பட்ட வெண்கல பாத்திரங்களை கொண்டு தான் காந்தியடிகளின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே தமிழகத்தில் காந்தியடிகளுக்கு அமைக்கப் பெற்ற முதல் வெண்கல சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி அமைக்கப்பட்ட காந்தியடிகளின் இந்த முழு உருவ வெண்கல சிலை1960 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இதில் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்திய நாட்டில் பல இடங்களில் காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் அவரது பிறந்த நாளான காந்தி ஜெயந்தி, நினைவு நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கியமான நாட்களில் மட்டுமே மாலை அணிவித்து மரியாதையை செய்யப்படும். ஆனால் பொன்மலையில் நிறுவப்பட்டுள்ள காந்தியடிகள் சிலைக்கு மாதம்தோறும் 30 ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதையை செய்யும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
இப்படி திருச்சி மாநகரத்தோடு இணைந்த வரலாற்று பெருமையை பெற்ற காந்தியடிகளை நினைவு கூறும் விதமாக இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு “மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை” (mahatma gandhi memorial government hospital in trichy) என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.